Friday, March 2, 2018

வா ஒருநாள்...

உன்னுடன்
பேசாமலிருந்தால் என்ன
என்று தோன்றும் போதெல்லாம்
உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது
என்னுள்...
கல்லெறிந்த குளத்தின்
அலைகளைப் போல் அமைதியின்றி
தவிக்கிறது மனம்.
சந்திக்கும் தூரத்தில் நீ
இல்லை.
நம் சந்திப்பும் தண்டவாளங்களைப்
போலவே நீள்கிறது தனித்தனியே
இணையாத இரு கோடுகளாய்..
இருப்பினும் அந்த கனங்களும்
மகிழ்வாய் கரைகிறது
மேலும் சேர்க்கிறது சில நினைவுத் துளிகளை...
வா ஒருநாள் கைப்பற்றி
வனமெங்கும் நடந்திடுவோம்
மனமெங்கும் பரவசத்துடன் மகிழ்வாய்...
வாழ்வின் இன்பங்களை உடலால் அல்ல
நினைவுகளால் பரவசப்படுத்துவோம்.
                                           - இயற்கை நேசன்

Monday, December 18, 2017

பிரிந்தாலென்ன சேர்ந்தாலென்ன?

உனக்கான
என் இதய வெளி
இன்னும் திறந்தே கிடக்கிறது

அலைபேசி புத்துயிர்க்கு
பிறகான எல்லா கனங்களும்
உன் வரவிற்கான எதிர்பார்ப்பை
கூட்டிவைத்துள்ளது
இதயமெங்கும்...

நமக்கு விதிக்கப்பட்ட
வெவ்வேறு பாதைகளில்
பயணித்தாலும்
நாம் நமக்குள்
ஏற்படுத்திக் கொண்ட
உனக்கும் எனக்குமான
ஒற்றைப் பாதையில் தான்
பயணிக்கின்றோம்
இதயங்களுக்கு ஏது இடைவெளி?

நாம் நமக்கான
காதலை உணர்ந்து கொண்டும்
சுமந்து கொண்டும் தான்
தூரங்களில் தொலைந்துள்ளோம்
காதலில் வென்று தான் நிற்கிறோம்
அந்த இருமாப்புடன்
காத்திருப்போம்..
நமக்கான காலத்திற்காய்...
இனி
நாம் பிரிந்தாலென்ன
சேர்ந்தாலென்ன?
                       - இயற்கைநேசன்



Friday, December 8, 2017

சொல்லிவிட்டுப் போ...

உன் 
அழைப்புக்காக
காத்திருக்கிறேன்
கைப்பேசியை
அடிக்கடி பார்த்தபடி..
ரயிலை நோக்கி
பயணத்திற்கு நிற்கும்
பயணியைப் போல...
உன் அழைப்பு 
வராத நாட்களில் 
என் நேரங்கள் 
நொடி நொடியாய்
நெடிதாய் கடக்கிறது
சொல்லிவிட்டு போ
நாளை அழைப்பு வராது என்று..
தொலைவில் நீ
என்னவென்று அறிய முடியாத
இயலாமையுடன் நான் ... 
வெறுப்புடன் கைப்பேசியை
பார்த்தவாறே அந்நாளை
கடக்கின்றேன் 
நிலவை தொலைத்த
வானத்தைப் போல...
                 - இயற்கை நேசன்



நீ புகட்டிய நீர்!

நீ
ரசனையானவள்
உன்னிடமிருந்தே
அறிந்தேன்...
நீரை இப்படியும்
புகட்டலாம் என்று...
உன் வாயின் இதழ் மூலம்
என் இதழ் வழியே...
நீ
புகட்டிய நீர்
திகட்டவில்லை!
தித்தித்தது...
தாகத்தை குறைத்து
தாபத்தை கூட்டியது.
அளவு சிறிதெனினும்
குடல்வரை மட்டுமல்ல
உடல் முழுதும் நிறைத்தது
நரம்புகளின் வழிச் சென்று
இதயத்தை தொட்டது!
நீ
அன்பானவள்
அன்பைக் கொண்டு
நீர் புகட்டினாய்
அதனால் தான் அது
இதயத்தைத் தொட்டது!
நீ
அழகானவள் மட்டுமல்ல
பேரன்பின் அடையாளம்!!
                          - இயற்கை நேசன்


உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை!

உன்னிடம் நான்
இதை எதிர்பார்க்கவில்லை!!
எவ்வளவு ஆழமாக வார்த்தைகளால்
வலியை பரப்பி சென்றாய்..
உன்னோடு இருந்த பொழுதுகள்
என்னுள் எப்போதும் நினைவுகளாய்
உன்னிலிருந்து தள்ளி
விலகி நிற்க முடியவில்லை
என்னால் ..... இப்போதும்
உன்னுடனான பொழுதுகளை
நீ எனக்கானவள் என்றே போதிக்கிறது.
நமக்கான காதல்!
நான் என்ன செய்யட்டும்
உனக்கும் எனக்குமான
அந்த இடைவெளியைக்கூட
மறந்தவனாய் ஆகிவிடுகின்றேன்.
நீ எனக்கானவள் என்றே
உன் பார்வைகள்
என் இதயத்தை நிரப்பி விடுகிறது!
அன்றும் அப்படியாய்
ஒரு மனநிலையில் தான்
விளையாட்டாய் ...
அதை நீ இவ்வளவு
பாரமாய் எடுத்திருக்க வேண்டாம்.
தூரமாய் நிற்கச் சொல்
விரல்கள் என்ன நிழலும் படாது
நானொன்றும்
இச்சைகளின் விருப்பமானவன் அன்று
பேரன்பின் காதலன்!
மறந்து விடாதே!
நானும் தான்...
உன்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை!
                              - இயற்கை நேசன்

வாய்ப்பளிக்குமா காலம்?


Tuesday, November 21, 2017

மெளனித்து கடக்கின்றேன்..

என்ன செய்ய இயலும்
அன்பால் வீழ்த்தப்பட்ட
எளியவனால்...
தூரமாய் கடந்து நிற்கும்
உன்னிடம் சில
எதிர்பார்ப்புகளைத் தவிர...
பேரன்பினைத் தவிர
வேறொன்றும் வேண்டாம்
எனக்கு...
அதையென்றும்
நிறுத்தி விடாதே

போர்களின்றி
போர்க்கைதியாய்
நான் உன்னிடம்...
சுவரற்ற சிறையில்
சுதந்திரமாய் இருப்பினும்
வெளியேறாதபடியே
வீழ்த்தப்பட்டுள்ளேன்.

காலங்கள் தீர்மானிக்கட்டும்
என் தீர்மானங்களை...
அதுவரை
மௌனித்து கடக்கின்றேன்
சில நிபந்தனைகளின் படி..!
                                       - இயற்கை நேசன்

வா ஒருநாள்...

உன்னுடன் பேசாமலிருந்தால் என்ன என்று தோன்றும் போதெல்லாம் உன் நினைவுகள் ஆக்ரமித்துக் கொள்கிறது என்னுள்... கல்லெறிந்த குளத்தின் அலைகளைப்...